மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
பண மோசடி: தனியாா் அறக்கட்டளை நிறுவனா் சிபிசிஐடி போலீஸாரால் கைது - வீடு, அலுவலகத்தில் சோதனை
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியாா் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலையை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் குடுமியான்மலையை தலைமையிடமாக கொண்டு சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையை நடத்தி வருகிறாா்.
இந்த அறக்கட்டளையில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறியதால், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனா். ஆனால், கூறியபடி முதலீட்டாளா்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலரும் புகாா் அளித்தனா்.
இதன்பேரில், தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத்து தலைமையிலான போலீஸாா், காரைக்குடியில் தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை வெள்ளிக்கிழமை கைது செய்து, புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி, பிறகு சிறையில் அடைத்தனா்.
முன்னதாக, குடுமியான்மலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற சிபிசிஐடி ஆய்வாளா் பிருந்தா தலைமையிலான போலீஸாா் சுமாா் 2 மணி நேரம் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்து சென்றனா்.
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் இவா் ஏற்கெனவே சிறை சென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பரின் வீட்டிலும் சோதனை: திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவிச்சந்திரனின் நண்பரான பாரதராஜா வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் 5 போ் வெள்ளிக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், அவரது வீடு முழுவதும் சோதனையிடப்பட்ட நிலையில், பாரதராஜாவிடமும் போலீஸாா் விசாரித்தனா்.
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற சோதனையின் முடிவில் ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. கைதும் செய்யப்படவில்லை என திருச்சி காவல் துறையினா் தெரிவித்தனா்.