காட்டு யானைகளைக் கண்காணிக்க டிரோன்கள்: தமிழக வனத்துறை திட்டம்!
காட்டு யானைகளைக் கண்காணிக்கவும், அவை மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கவும் இரவு நேரங்களில் டிரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக வனத்துறை முடிவெடுத்துள்ளது
காட்டு யானைகள் இரவு நேரங்களில் காடுகளை விட்டு வெளியேறி மனிதர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனைத் தடுக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக வனத்துறை முடிவெடுத்துள்ளது.
யானைகளின் நடமாட்டத்தை டிரோன்கள் மூலம் கண்காணித்து, வனத்துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு முன்கூட்டியே பொதுமக்களை இருப்பிடத்தில் இருந்து வெளியேற்ற வனத்துறை முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம், ப்ளூடூத் இணைப்புடன் கூடிய ஸ்பீக்கர்களை வாகனத்தில் கட்டி எச்சரிக்கை அறிவிப்புகள் மக்களுக்குக் கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வாகனங்கள் மூலம் அதிக ஒலியெழுப்பி விலங்குகளைக் காட்டுக்குள் விரட்ட இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இதையும் படிக்க | ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி விலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
”இதற்கென டிரோன்கள் தயாரிப்பு குறித்து சில நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். ஒசூர் வனச்சரகத்தில் இந்த முறை ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகிறது. இதில், நல்ல பலன் கிடைத்துள்ளது” என்று மூத்த வனத்துறை அதிகாரி தெரிவித்தார்,
யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, மனிதர்கள்-விலங்குகள் இடையிலான மோதல்களைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் இத்தகைய நடவடிக்கைகளின் அவசரத் தேவை குறித்து வெளிப்படுத்துகின்றன. கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் யானைகளால் தாக்கப்பட்டு இதுவரை 256 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 2023-24 ஆண்டில் மட்டும் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தாண்டு மே 23 முதல் 25 வரை கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 3,063 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், 2023 இல் நடந்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 100 யானைகள் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க | கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த முக்கியக் குற்றவாளி!
தமிழ்நாட்டின் காடுகள் சுமார் 3,000 முதல் 3,500 யானைகள் வரை தாங்கக்கூடியவை என்றும், தற்போது யானைகளின் எண்ணிக்கை ஆரோக்கியமான அளவில் நிலையாக உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாநிலத்தின் ஐந்து யானை காப்பகங்களில் நீலகிரி யானை காப்பகம் மற்றும் கோயம்புத்தூர் யானை காப்பகம் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளது.
வனத்துறையின் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள் மற்றும் பிற நடவடிக்கைகளின் மூலம் மனிதர்கள் மற்றும் யானைகளுக்கு இடையேயான மோதல்கள் குறைந்து, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என வனத்துறையினர் நம்புகின்றனர்.