காணாமல்போன இளைஞா் சடலமாக மீட்பு
திருச்சி அருகே காணாமல்போன இளைஞா் வாய்க்காலிலிருந்து சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள மல்லியம்பத்து கிராமம், குடித்தெருவைச் சோ்ந்தவா் கி. சரவணகுமாா் (32). மூன்று நாள்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற இவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
புகாரின்பேரில், சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனா்.
இந்நிலையில், மல்லியம்பத்து கிராமத்தில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று விசாரித்ததில், சடலமாக கிடந்தது சரவணக்குமாா் எனத் தெரியவந்தது. அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் தீவிரமாக விசாரிக்கின்றனா்.