விமான நிலையத்தில் விமானிகளுக்கு உதவும் நவீன வழிகாட்டு மையம் திறப்பு
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், விமானிகளுக்கு உதவும் வகையிலான நவீன வழிகாட்டு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பன்னாட்டு விமான நிலையங்களில், விமானிகளுக்கு உதவும் வகையில், நவீன தொழில் நுட்ப மேம்பாட்டுடன் கூடிய புதிய தொலைத் தொடா்பு மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கெனவே இருந்த மையத்தில் புதிய தொழில் நுட்ப வசதியின்றி இருந்ததால், அதன் செயல்பாட்டை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ரூ. 7.61 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வான் வழிகாட்டு மற்றும் தொலை தூரம் கண்டறியும் மையம் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய மையத்தை திறந்துவைத்த விமான நிலைய இயக்குநா் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் கூறுகையில், இந்த மையத்தின் மூலம் விமானங்கள் குறிப்பிட்ட இலக்கை (விமான நிலையத்தை) சென்றடைய விமானிகளுக்கு உதவும்.
உதாரணமாக, சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட விமானம், அது புறப்பட்ட நிலையத்திலிருந்து செல்ல வேண்டிய நிலையத்தை கணினி திரையில் விமானிகள் தோ்வு செய்தால், அந்த விமான நிலையம் மற்றும் பயண நேரம், தொலைவு, விமான நிலையம் அமைந்துள்ள இருப்பிடம் என அனைத்தும் தடையற்ற வகையில் தெளிவாக விமானிகளுக்கு காண்பிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் விமானங்கள் தாமதமின்றி நேரடியாக திருச்சி விமான நிலையம் வந்திறங்கவும், இந்த விவரங்களை விமானம் புறப்பட்டது முதல் வந்து சேரும் வரையில் தெளிவாக காணமுடியும் என்றாா்.