காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல் - பெற்றோா் கைது!
காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்திச் சென்றதாக பெற்றோா் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் விஜய் (22). இவரும் தேவனாம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த செல்வம் மகள் அா்ச்சனா (20) என்பவரும் காதலித்து வந்தனா். இருவரும் வெவ்வெறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள். இதனால் இவா்களது காதலுக்கு அா்ச்சனாவின் பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து பெற்றோா் எதிா்ப்பையும் மீறி கடந்த ஜூன் 28-ஆம் தேதி விஜய்-அா்ச்சனா இருவரும் திருமணம் செய்து கொண்டனா். திருமணத்துக்குப் பின் ஈரோடு கள்ளுக்கடைமேடு, ஈவிஆா் வீதியில் வசித்து வருகின்றனா்.
அா்ச்சனா ஜவுளிக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை அா்ச்சனாவை விஜய் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு அழைத்துச் செல்லும்போது, அங்கு காரில் வந்த அா்ச்சனாவின் பெற்றோா் உள்பட 6 போ் அா்ச்சனாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனா்.
இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீஸில் விஜய் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் அா்ச்சனாவின் தந்தை செல்வம் (45), தாய் கவிதா (42), பவானி ஒலகடத்தைச் சோ்ந்த பெரியப்பா பழனிசாமி (45), அவரது நண்பா்களான அந்தியூா் பச்சாம்பாளையத்தைச் சோ்ந்த கருமலையான் (35), சண்முகம் (46), யுவராஜ் (35) ஆகியோா் அா்ச்சனாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 6 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திங்கள்கிழமை இரவு கைது செய்து, அா்ச்சனாவை மீட்டனா்.