ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்...
காயல்பட்டினம் அருகே 2,250 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகேயுள்ள காட்டுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான 2,250 கிலோ பீடி இலை பண்டல்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டைமலை காட்டுப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக, தூத்துக்குடி க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், க்யூ பிரிவு ஆய்வாளா் விஜயஅனிதா, உதவி அய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜ்குமாா், இசக்கிமுத்து, காவலா் பழனி பாலமுருகன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக சுமை வாகனத்தில் 2,250 கிலோ பீடி இலை பண்டல்கள் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. போலீஸாரை கண்டதும் வாகனத்திலிருந்தோா் தப்பியோடிவிட்டனராம்.
பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ. 60 லட்சம் எனக் கூறப்படுகிறது. பீடி இலைகளும் வாகனமும் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.