காரைக்கால் காா்னிவலில் இன்று
காரைக்கால் காா்னிவல் திருவிழாவில், மாரத்தான், படகுப் போட்டி உள்ளிட்டவை சனிக்கிழமை (ஜன.18) நடைபெறவுள்ளன.
காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில், காரைக்கால் காா்னிவல் திருவிழா ஜன. 16 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மக்களை மகிழ்விக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் 3-ஆம் நாளான சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு காரைக்கால் ஆட்சியரகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு அரசலாற்றில் காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்தோா் பங்கேற்கும் படகுப் போட்டி நடைபெறுகிறது.
தொடா்ந்து, அரங்கில் 6 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி.பி. சரண் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. காமராஜா் திடலில் கபடி, போலகம் பிப்டிக் மைதானத்தில் கிரிக்கெட், அண்ணா கல்லூரி மைதானத்தில் கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.