காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் நாளை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு
காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்யவுள்ளாா்.
காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில் நிலையம் மற்றும் பிற இடங்களில் ரயில் நிறுத்தங்கள் அமைத்து, மின் மயமாக்கும் பணிகள், சுரங்கப்பாதை, சாலையின் குறுக்கே ரயில்வே கேட் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, செவ்வாய்க்கிழமை ரயில்வே முதன்மை மின் பொறியாளா் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை செய்தாா்.
அடுத்தக்கட்டமாக தெற்கு ரயில்வே பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் இப்பாதையில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆய்வு செய்கிறாா்.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: காரைக்கால் - பேரளம் பாதையில், 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாதுகாப்பு ஆணையா், பேரளம் முதல் திருநள்ளாறு வரை ஆய்வு செய்கிறாா். 24-ஆம் தேதி சனிக்கிழமை திருநள்ளாறு முதல் காரைக்கால் வரை ஆய்வு செய்கிறாா். அப்போது விரைவு ரயில் இயக்கி சோதனை நடைபெறுகிறது.
ஆய்வின்போது இந்த பாதையில் அத்துமீறி நுழைதல், பாதையை கடப்பது கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.