கார் மீது டிரக் கவிழ்ந்ததில் 6 பேர் பலி: நீல நிறக் காரை தேடும் போலீஸ்!
விடுமுறையைக் கொண்டாட புதிதாக வாங்கிய வால்வோ காரில் சனிக்கிழமை ஊருக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது லாரியின் கண்டெய்னர் விழுந்ததில், தனியார் நிறுவன தலைமை செயல் அலுவலர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்துக்குக் காரணமான நீல நிறக் காரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 48ல் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்த சந்திராம் எகபகோல் (48), தனது மனைவி, இரண்டு பிள்ளைகள், மற்றும் உறவினர்கள் இருவருடன் புதிதாக வாங்கிய வால்வோ எக்சி90 காரில் விடுமுறையைக் கொண்டாட சென்ற போது, எதிர் திசையில் அலுமினிய தூண்களைக் கொண்டு வந்த டிரக் கவிழ்ந்ததில், ஆறு பேரும் பலியாகினர்.
இந்த நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ஜார்க்கண்டைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் ஆரிஃப் கூறுகையில், சாலையில் முன்னாள் சென்றுகொண்டிருந்த நீல நிறக் கார்தான் திடீரென பிரேக் அடித்து நின்றது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல், அந்தக் கார் மீது மோதாமல் இருக்க டிரக்கை வலது புறமாகத் திருப்பினேன். அங்கும் ஒரு கார் இருந்ததால் மீண்டும் இடதுபுறமாகத் திருப்பியதால்தான் டிரக்கில் இருந்த அலுமினிய தூண்கள் சரிந்து விபந்து விபத்து நேரிட்டது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, டிரக் ஓட்டுநர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், நீல நிற கார் தான் திடீரென பிரேக் அடித்து நின்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த கார்மற்றும் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.