காலமானார் தோழர் ஜனநேசன் என்ற வீரராகவன்!
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் - வேலங்குடி பைபாஸ் சாலையைச் சேர்ந்த கவிஞர் ஜனநேசன் (68) என்ற வீரராகவன் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை (ஜன. 17) காலை 7 மணியளவில் இயற்கை எய்தினார்.
அன்னாரது உடல் ஹதராபாத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கோட்டையூர் - வேலங்குடி சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
அவர் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்துள்ளதால், சனிக்கிழமை (18.01.2025) அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கும் நிகழ்வு பகலில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
மறைந்த வீரராகவனுக்கு, பத்திரப்பதிவு துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற அவரது மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கர்ணன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார். இளைய மகன் நிருபன் மருத்துவராக பிரிட்டனில் பணியாற்றுகிறார்.
மறைந்த வீரராகவன் என்ற ஜனநேசன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறந்த கவிஞர், சிறுகதை கதாசிரியர், எழுத்தாளர் என பன்முக திறமை மிக்கவர். தினமணி கதிர், தினமலர் மற்றும் பிரபல பத்திரிகைகளிலும், பிரபல இணைய வழி பத்திரிகைகளிலும் பல்வேறு கதைகள் வெளியாகியிருக்கிறது. பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பிரச்னைகள் குறித்து நாவல் எழுதிய சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர். மேலும் இவர் முற்போக்கு சிந்தனை வாதியாவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்து பல்வேறு நிகழ்வுகளுக்கும், கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகளையும் முன் நின்று நடத்தியவர்.
காரைக்குடி புத்தக திருவிழா தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்போது மூத்த உறுப்பினராக இருந்து ஆலோசனை வழங்கியவர். குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாருக்கு நன்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு 94422 83668.