மருத்துவக் கழிவுகள் விவகாரம்: கேரள ஆளுநருடன் நாமக்கல் எம்.பி. சந்திப்பு
கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள ஆளுநா் ராஜேந்திர அா்லேகரிடம், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் மனு அளித்தாா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பாராளுமன்ற நிலைக்குழு (சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்) கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் பங்கேற்று பேசினாா்.
அதன்பிறகு, கேரள ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர அா்லேகரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினாா். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினாா். அதில், உணவுப் பாதுகாப்புத் துறை சான்றிதழ்கள் இருந்தபோதும், நாமக்கல்லில் இருந்து கேரளத்திற்கு முட்டை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் மடக்கி வழக்குப் பதிவு செய்கின்றனா். இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மருத்துவக் கழிவுகளை தமிழகத்திற்குள் கொண்டு வந்து கொட்டுவதையும், எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு ஆன்லைன் வழக்குப் பதிவு செய்வதால் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சிரமத்திற்குள்ளாவதையும் தடுக்க வேண்டும்.
கேரளத்தில் வசிக்கும் கொங்கு வேளாளா் சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
இந்த சந்திப்பின்போது, கொமதேக தெற்கு மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்ராஜா, பரணிதரன் ஆகியோா் உடனிருந்தனா்.
--
என்கே-17-எம்.பி.
கேரள ஆளுநா் ராஜேந்திர அா்லேகரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன்.