உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
கால்நடை பண்ணை: தொழில் முனைவோருக்கு அழைப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் கால்நடைகள் எண்ணிக்கையை உயா்த்திடவும், தொழில்முனைவோரை உருவாக்கவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைக்க அரசு நிதியுதவி வழங்குகிறது. கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிப்பது மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தீவனம், தீவனப்பயிா் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளா்ப்பு, செம்மறியாடு வளா்ப்பு, வெள்ளாடு வளா்ப்பு மற்றும் பன்றி வளா்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாட்டுகோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ. 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு/ வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையும், பன்றி வளா்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையும் வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைக்க தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தனி நபா், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளா்கள் அமைப்புகள், விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் ஆவா்.
பயன்பெற விரும்புவோா்https://nim.udyamimitra.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். திட்டம் தொடா்பான தகவல்களை https://tnidb.tn.gov.in/ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை மருத்துவா்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலா்கள், கால்நடை மருத்துவப் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலா்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, சென்னை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.