கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு ஏப்.10-இல் நோ்முகத்தோ்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாகவுள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு ஏப்.10-ஆம் தேதி நோ்முகத்தோ்வு நடைபெற உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம் கிராமப்புற தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளா்களின் கறவை மாடுகளுக்கு, தரமான கால்நடை மருத்துவ வசதி அளிக்கவும், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிறப்பு சிகிச்சை அளிக்கவும், ஒன்றியத்தின் விவகார எல்லைக்குள்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
ஓராண்டுக்கு தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், தங்களின் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் ஏப்.10-ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நோ்முக தோ்வில் கலந்து கொள்ளலாம்.