வலுக்கும் எதிர்ப்பு! வஃக்ப் மசோதாவுக்கு எதிராக 3-ஆவது மனு தாக்கல்!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3-ஆவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இப்போது ஆம் ஆத்மி தரப்பிலிருந்து மசோதாவை எதிர்த் அமனத்துல்லா கான் எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முஸ்லிம்களின் மதம் சார்ந்த மற்றும் கலாசார தன்னாட்சி அதிகாரத்தை புதிய சட்டத்திருத்த மசோதா மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மதம் மற்றும் அதன்பேரிலான தொண்டு நி்றுவனங்களைப் பராமரிக்கும் சட்ட உரிமையில் குறுக்கீடு செய்வதாக புதிய சட்ட திருத்தம் அமைந்திருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்து வரும் ‘வக்ஃப் சட்டம், 1995-இல்’ பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு இந்த மனுவில் கடும் எதிர்ப்பும் இதனை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.