கல்லூரி தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கேள்விகள்: பேராசிரியருக்குத் தடை!
Microsoft's 50 years: `அந்த ஒரு பொய்யை உண்மை ஆக்கினோம்' - பில்கேட்ஸும் மைக்ரோசாப்ட்டும்!
கம்ப்யூட்டர் மானிட்டரில் லைட் நீல நிற பேக் கிரவுண்ட்.
அதில் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் நிறம் என நான்கு பெட்டிகள். முறையே மேலே இரண்டு பெட்டிகள்; கீழே இரண்டு பெட்டிகள்.
இது பெரும்பாலனாவர்களின் மைக்ரோசாப்ட் மெமரீஸாக இருக்கும்.
டிகிரி, டபுள் டிகிரி, முனைவர் பட்டம் வாங்க எப்படி எல்.கே.ஜி, யு.கே.ஜி அடிப்படையோ, அப்படி இன்று அடோப்பிலும், ஏ.ஐ-யிலும் புகுந்து விளையாடும்.. விளையாடப்போகும் பலருக்கும் இன்றும், இனியும் மைக்ரோசாப்ட்டின் வோர்டும், பவர்பாயிண்டும் அடிப்படையாக இருந்திருக்கும்... இருக்கும்.
1975-ம் ஆண்டு சிறு வயது நண்பர்களான பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் மைக்ரோசாப்ட். தற்போது இது அரை சதத்தை அடித்துள்ளது.
இதன் 50 ஆண்டுக்கால பயணக் கதையை பில் கேட்ஸின் வார்த்தைகள் வழியாகவே பார்க்கலாமா...
"50 ஆண்டுகளுக்கு முன்பு, நானும், என் நண்பர் பால் ஆலனும் மைக்ரோசாப்ட்டை தொடங்கிய போது இருந்ததை விட, தற்போது கம்ப்யூட்டர் துறை பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்த வளர்ச்சியில் எங்கள் நிறுவனமும் பங்காற்றியுள்ளது என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது.
நேரம் இல்லை
1975-ம் ஆண்டு, ஜனவரி மாதம், 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் கிட்' என்ற நியூஸ் பேப்பரில் விளம்பரத்தைப் பார்த்த பால் ஆலன், என்னிடம் ஓடி வந்து, "இது நாம் இல்லாமல் நடக்கிறது" என்று கூறினார். இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை பால் முழுவதும் புரிந்து தான் இருந்தார். அதாவது அப்போது முதல் பெர்சனல் கம்ப்யூட்டர் அறிமுகமாகி இருந்தது.
எனக்கும், 'நமக்கு நேரம் இல்லை' என்பது புரிந்தது.
எழுதிய கடிதம்
அடுத்ததாக, பால், மிட்ஸ் (Micro Instrumentation and Telemetry Systems) (இது 1970-களில் பெர்சனல் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்த நிறுவனம் ஆகும்) நிறுவனத்திற்கு "எங்களிடம் இன்டெல் 8080 சிப்பிற்கான பேசிக் வெர்சன் (Version of Basic) உள்ளது" என்று கடிதம் ஒன்றை எழுதினார்.
ஒரு வாரத்திற்கு அந்த கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை. அதன் பிறகு, நாங்களே அந்த நிறுவனத்திற்கு போன் செய்தோம். அந்த நிறுவனத்தின் தலைவர் தான் அந்தப் போனை எடுத்தார். 'எந்தக் குழுவால் செயல்படும் வெர்சனை தயாரிக்க முடிகிறதோ, அந்த நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் கிடைக்கும்" என்று கூறினார்.
அப்போதே, அது நாங்களாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டோம்.

பார்த்ததே இல்லை
அதனால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நானும், பாலும் எந்த சாப்ட்வேர் ஏற்கெனவே இருக்கிறது என்று கூறியிருந்தோமோ, அதை தயாரிக்க கடுமையாக இரவு, பகலாக உழைத்தோம்.
நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டோம்.
நிறைய கடின உழைப்புகளுக்கு பிறகும், போதுமான நேரம் இல்லாமலும் தயாரிக்கப்பட்ட டெமோவுடன் மிட்ஸின் தலைமையகத்திற்கு பால் சென்றார்.
ஆனால், அந்த டெமோ வேலை செய்கிறதா என்பதைக் கூட நாங்கள் பார்க்கவில்லை. இவ்வளவு ஏன் நாங்கள் எங்களது டெமோவை லோட் செய்யும் ஆல்டைரைக் (Altair) நேரில் பார்த்ததுக்கூட இல்லை.
மிட்ஸில் பால் டெமோவை லோட் செய்து காத்திருந்த தருணம் அது மிகவும் பதற்றமான தருணம்.
ஆனால், எல்லாம் வெற்றிகராமாக அமைந்தது. அந்தத் தருணத்தில் பெர்சனல் கம்ப்யூட்டருக்காக உருவாக்கப்பட்ட முதல் சாப்ட்வேர் உயிர்பெற்றது.
பிடித்த பெயர்... இல்லை... அமைந்த பெயர்
ஒப்பந்தம் கிடைத்தப் பிறகு, எங்கள் நிறுவனத்திற்கு எதாவது பெயர் வைக்க வேண்டும். 'ஆலன் அன்ட் கேட்ஸ் கன்சல்ட்டிங்' என்று பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், எங்களது நிறுவனத்தை வழக்கறிஞர் நிறுவனம் என்று மக்கள் நினைத்தால் கொண்டால் என்ன செய்வது?
அதனால், மைக்ரோ பிராசஸர் மற்றும் சாப்ட்வேரை இணைத்து 'மைக்ரோ - சாப்ட்' என்று பெயரிட்டோம். பின்னர், நடுவின் இருந்த கோட்டை நீக்கிவிட்டோம்.

எங்களது கொள்கை
1976-ம் ஆண்டு கடைசியில், நியூ மெக்சிகோவில் இருந்த ஒரு புதிய கட்டடத்தின் எட்டாவது மாடியில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தோம்.
அடுத்ததாக, எங்களது நட்பு வட்டத்தை தாண்டி, இன்னொருவரை வேலைக்கு எடுத்தப்போது தான், மைக்ரோசாப்ட் எங்களுக்கு நிறுவனமாக தெரிந்தது.
'அனைத்து டெஸ்குகளிலும், வீடுகளிலும் கணினி' - இதுதான் எங்கள் கொள்கை.
1983-ம் ஆண்டு, பாலுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மிக கடினமான தருணம். அதில் இருந்து பலமுறை மீண்டு பால் வந்திருந்தாலும், அந்த நோயால் 2018-ம் ஆண்டு பால் உயிரிழந்தார்.
பால் ஆலன்
பால் இல்லாமல் மைக்ரோசாப்ட் இல்லவே இல்லை. பாலின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், கடினமான பிரச்னைகளை தீர்க்கும் திறனும் மைக்ரோசாப்ட்டின் வெற்றிக்கு மிக முக்கியம்.
நான் சந்தித்த மிக புத்திசாலியான, ஆர்வமுள்ள மனிதர்களில் ஒருவர் பால்.
வெளியீடுகள்
1985-ம் ஆண்டு Windows 1.O-ம், 1987-ம் ஆண்டு Windows 2.O-ம், மே, 1990-ம் ஆண்டு Windows 3.O -ம், அக்டோபர், 1990-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் ஆபீஸையும், 1995-ம் ஆண்டு Windows 95-ம் வெளியிடப்பட்டது.
1990-ம் ஆண்டிற்கு முன்பே, வோர்ட், எக்சல், பவர்பாயிண்ட் ஆகிய மூன்றும் முன்பே சந்தைகளில் தனித்தனியாக இருந்தாலும், அதன் பிறகு தான், மூன்றும் ஒன்றாக விற்பனை செய்யப்பட்டது.
2000-ம் ஆண்டு, புதிய புரோடக்ட் திட்டங்களுக்காக நான் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகினேன். ஆனால், குழு தலைவராக நீடித்தேன். எனக்கு பின்னர் ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாப்ட்டின் புதிய சி.இ.ஓவாக பதவியேற்றார்.

கடினமான முடிவு
கிட்டதட்ட முப்பது ஆண்டுகளாக மைக்ரோசாப்ட்டில் முழு நேரம் பணிபுரிந்த நான், 2008-ம் ஆண்டு ஜூன் மாதம், மைக்ரோசாப்ட்டின் பகுதிநேர ஊழியர் ஆனேன். இது கடினமான முடிவு தான். ஆனாலும், இந்த முடிவை கேட்ஸ் அறக்கட்டளையை பார்த்துகொள்வதற்காக எடுத்தேன்.
2014-ம் ஆண்டு மைக்ரோசாப்ட்டின் சி.இ.ஓவாக பணியேற்ற சத்யா நாதெள்ளா பல்வேறு சாதனைகளை செய்துவருகிறார்.
தொழில்நுட்ப ஆலோசகராக நான், நிறுவனம் என்னென்ன அருமையான வேலைகளை செய்துகொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறேன். அடுத்து என்ன செய்யப்போகிறது என்றும் காத்திருக்கிறேன்".
இப்படி பில் கேட்ஸின் நினைவுகள் முடிகிறது.
வயது 50 ஆண்டுகள் தான்; ஆனால், இன்னமும் 5 வயதைப் போல பெரும்பாலானவர்களின் கணினிகளில் துள்ளி விளையாடி கொண்டிருக்கிறது மைக்ரோசாப்ட்.
வோர்ட்ஸ், பவர்பாயிண்ட், எக்ஸல் என்று நின்றுவிடாமல் அவுட் லுக் தொடங்கி லேட்டஸ்ட் ஏ.ஐ-யில் மைக்ரோசாப்ட் கோ பைலட்டாக வரை இன்று வரை களத்தில் டஃப் போட்டி கொடுத்து வருகிறது. இது நின்றெல்லாம் விடாது. கட்டாயம் தொடரும்.

கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுத்தம் ஏற்பட்டப்போது, உலகமே ஸ்தம்பித்ததை நாம் அனைவரும் கண்டோம். உலகத்தோடு அவ்வளவு ஒன்றியிருக்கிறது மைக்ரோசாப்ட்.
அது இன்னமும் 60, 75, 100... என ஆண்டுகளை கடந்து வெற்றிநடைப்போட வாழ்த்துக்கள்.
ஹேப்பி 50-வது பிறந்தநாள் மைக்ரோசாப்ட்!
நன்றி: www.gatesnotes.com
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
