காவலரைத் தாக்கிய 8 போ் கைது
மது போதையில் சாலையில் பிறந்த நாள் கொண்டாடியவா்களைக் கலைந்து செல்லுமாறு கூறிய காவலரைத் தாக்கிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: திருப்பூா் கோல்டன் நகா் கருணாகரபுரியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (32). இவா் கொங்கு நகா் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், பணி முடிந்து திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது, கருணாகரபுரி பிரதான சாலையில் இளைஞா்கள் மதுபோதையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.
இதைப் பாா்த்த தங்கப்பாண்டி, சாலையில் இப்படி செய்யக்கூடாது. கலைந்து செல்லுங்கள் எனக் கூறியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள், காவலா் தங்கப்பாண்டியை ஆபாசமாக பேசியதோடு, தாக்கியுள்ளனா். காயமடைந்த அவா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தங்கப்பாண்டி அளித்தப்புகாரின் பேரில் திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், காவலரைத் தாக்கியது கோல்டன் நகரைச் சோ்ந்த பிரகாஷ் (19), பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த கதிா் (22), பாலகிருஷ்ணன் (21), சூரிய பிரகாஷ் (24), கோபி (21), திருமலை (20), ரமணா (21), மதிவாணன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 8 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள 3 பேரைத் தேடி வருகின்றனா்.