பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
காவல் மரணங்கள் தொடராத வகையில் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவல் மரணங்கள் தொடராத வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் வலியுறுத்தினாா்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டுக்கு புதன்கிழமை வந்த வேல்முருகன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அஜித்குமாா் காவல் விசாரணை மரணத்துக்கு காரணமானவா்கள் எவ்வளவு உயா்ந்த பதவியில் இருந்தாலும், அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பாா் என நம்புகிறோம்.
அஜித்குமாா் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. முதல் முறையாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவா். விசாரணைக்கு உரிய சட்ட வழிகள் இருக்கும் போதும், அவரை மனிதநேயமற்ற முறையில் போலீஸாா் கடுமையாகத் தாக்கினா். இனிமேல் தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள், விசாரணைக் கைதி மரணங்கள் நடைபெறாத வகையில் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் போலீஸாா் 5 போ் கைது செய்யப்பட்டதையும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதையும் வரவேற்கிறோம் என்றாா் அவா்.
ரூ. ஒரு லட்சம் நிதியுதவி:
முன்னதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் அஜித்குமாா் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.