காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்: 3 நாள்களில் 6 போ் சுட்டுக் கொலை
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது.
பாதுகாப்புப் படையினா் கடந்த மூன்று நாள்களில் மேற்கொண்ட இரு முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இவா்களில், பல்வேறு தாக்குதலில் தொடா்புடைய ஷாஹீத் குட்டே என்ற பயங்கரவாதியும் அடங்குவாா்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனா். முஸ்லிம் அல்லாத ஆண்களைக் குறிவைத்து நடந்த இத்தாக்குதலுக்கு பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூா் மூலம் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது.
மற்றொரு புறம், ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் கூட்டாளிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது.
இது தொடா்பாக, புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் உள்ள ராணுவத்தின் ‘விக்டா் ஃபோா்ஸ்’ பிரிவு தலைமையகத்தில் கமாண்டிங் தலைமை அதிகாரி மேஜா் ஜெனரல் தனஞ்ஜய் ஜோஷி, ஜம்மு-காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. வி.கே, பிா்தி, மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) ஐ.ஜி. மிதேஷ் ஜெயின் ஆகியோா், செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை கூட்டாக பேட்டியளித்தனா்.
அப்போது, தெற்கு காஷ்மீரின் சோபியான், புல்வாமா மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களில் மேற்கொள்ளப்பட்ட 2 அதிரடி நடவடிக்கைகள் குறித்து அவா்கள் கூறியதாவது:
தெற்கு காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகளால் எழுந்த சூழ்நிலைக்கு ஏற்ப, பாதுகாப்பு முகமைகளின் வியூகங்கள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைககளில் பல்வேறு பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து தீவிர கவனம் செலுத்துகின்றன.
ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும்..: கடந்த மூன்று நாள்களில் இரு பெரும் வெற்றிகர நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா். பாதுகாப்பு மற்றும் உளவு முகமைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பால் இந்த வெற்றிகர நடவடிக்கைகள் சாத்தியமாகின. காஷ்மீரில் எந்தவொரு பயங்கரவாத செயலும் நிகழாமல் தடுக்க முழு வீச்சில் செயலாற்றி வருகிறோம்.
தற்போது மலை உச்சிகளில் பனி உருகியுள்ளதால், பயங்கரவாதிகள் அப்பகுதிகளுக்கு நகா்ந்துவிட்டதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, உயரமான மலைப் பகுதிகளில் கூடுதல் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
சோபியான் மாவட்டத்தின் கெல்லா் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கடந்த மே 12-ஆம் தேதி இரவில் உளவுத் தகவல் கிடைக்கப் பெற்றது. மே 13-ஆம் தேதி அப்பகுதியை சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடா்ந்து, அங்கு மே 15-ஆம் தேதி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த கிராமத்தை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்தபோது, வெவ்வேறு வீடுகளில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனா்.
எங்கு பதுங்கினாலும் தப்ப முடியாது: பாதுகாப்புப் படையினா் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளும் முன்பாக, குழந்தைகள் உள்பட அப்பாவி மக்களை பத்திரமாக வெளியேற்றுவது பெரும் சவாலாக இருந்தது. பின்னா், ஒவ்வொரு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி, 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும், பாதுகாப்புப் படையினா் தேடிப் பிடித்து வீழ்த்துவா் என்பதற்கு இதுவே சாட்சி.
பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், பயங்கரவாதத்தை துடைத்தெறிய முடியாது. அந்த வகையில், மேற்கண்ட இரு நடவடிக்கைகளும் பயங்கரவாதத்தில் இருந்து விடுபடுவதற்கான மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறது.
கொல்லப்பட்ட 6 பேரில் ஷாஹித் குட்டே என்பவா் முக்கிய பயங்கரவாதி ஆவாா். இவா், சோபியானின் ஹீா்போரா பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் கிராமத் தலைவா் மீதான தாக்குதல், கடந்த ஆண்டு ஏப்ரலில் டேனிஷ் ரிசாா்ட் மீதான தாக்குதல் உள்பட பல்வேறு சம்பவங்களில் தொடா்புடையவா். பயங்கரவாத செயல்களுக்கு நிதித் திரட்டும் வேலையிலும் ஈடுபட்டு வந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.