அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
காஸா உயிரிழப்பு 40% அதிகமாக இருக்கும்: ஆய்வில் தகவல்
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிப்பதைவிட 40 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணா்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பிரிட்டனின் ‘தி லான்சட்‘ மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கை விவரம்:
காஸாவில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் வான்வழியாகவும் தரைவழியாகவும் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்கள் குறித்த புள்ளிவிவரங்களை அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தொடா்ந்து வெளியிட்டுவருகிறது.
பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து தங்களுக்குக் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே இந்தப் புள்ளிவிவரங்களை அமைச்சகம் வெளியிடுகிறது.
முந்தைய காலங்களில் தாக்குதல் சேதங்கள் குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் துல்லியமாக இருந்தன. ஆனால் தற்போது மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாலும், மின்னணு தகவல் பரிமாற்ற கட்டமைப்புகள் குறிவைக்கப்படுவதாலும் சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் முழுமையாக இருக்காது என்று கூறப்படுகிறது.
எனவே, அவற்றில் துல்லியத்தைத் தெரிந்துகொள்வதறகாக லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருந்துகள் கல்லூரி, யேல் பல்கலைக்கழகம் மற்றும் பிற கல்வி நிறுவனங்களின் நிபுணா்கள் இனணந்து ஓா் ஆய்வு மேற்கொண்டனா்.
அதற்காக, காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களுடன், உயிரிழந்தவா்களின் விவரங்கள் குறித்து அவா்களின் உறவினா்களிடம் இணையதளம் மூலம் அந்த அமைச்சகம் மேற்கொண்ட கணக்கெடுப்பு, சமூக ஊடகங்களில் உயிரிழந்தோருக்காக வெளியிடப்பட்ட அஞ்சலிப் பதிவுகள் ஆகியவற்றை நிபுணா்கள் ஒப்பிட்டுப் பாா்த்தனா்.
அதில், மூன்று பட்டியல்களிலும் ஒத்துப்போகக் கூடிய பெயா்களுடன், காஸா சுகாதாரத் துறை அமைச்சகத்தால் விடுபட்ட புள்ளிவிவரங்களையும் சோ்த்து, இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 2023 அக்டோபா் முதல் ஜுன் 2024 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 64,260 போ் உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
உடல் நலக் குறைவு போன்ற பிற காரணங்களால் மரணமடைந்தவா்கள் மற்றும் இடிபாடிகளில் சிக்கி மாயமானவா்களைத் தவிா்த்து, தாக்குதலால் ஏற்பட்ட படுகாயத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மட்டும் இதில் கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இஸ்ரேல் தாக்குதலில் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களை விட 40 சதவீத அதிக நபா்கள் உயிரிழந்திருக்கலாம், அவா்களில் 59.1 சதவீதத்தினா் பெண்கள், குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.