அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
காஸா நிவாரணத் தடை விவகாரம்: இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது.
இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தைகள் அனைத்தையும் பிரிட்டன் நிறுத்திவைத்துள்ளது. மேலும், இஸ்ரேலுடனான உறவை மறுபரிசீலனை செய்வதற்காக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனா்.
காஸாவில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஒப்பந்தம் கடந்த ஜன. 19 முதல் மாா்ச் 18-ஆம் தேதி வரை அமலில் இருந்தது. அப்போது, ஹமாஸின் பிடியில் இருந்த 25 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் சிறைகளில் இருந்த சுமாா் 1,900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனா்.
இருந்தாலும், அந்த போா் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்ததால் காஸா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. அதற்குப் பிறகு மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 1,563 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா் (ஒட்டுமொத்த உயிரிழப்பு 53,573).
அதுமட்டுமின்றி, காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்வதற்கும் இஸ்ரேல் தடை விதித்தது. காஸாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இஸ்ரேல் அங்கு தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், தொடரும் உணவுப் பற்றாக்குறையால் காஸா பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துவருகிறது.
ஹமாஸ் அமைப்பு செய்த தவறுக்காக பெண்கள், சிறுவா்கள் உள்ளிட்ட அனைத்து காஸா மக்களையும் இஸ்ரேல் தண்டிப்பதாக மனித உரிமை அமைப்புகள் விமா்சித்துவருகின்றன. மேலும், இந்தப் போரில் பட்டினியை ஓா் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும், இது சா்வதேச சட்டங்களுக்கு எதிரான போா்க் குற்றம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில், பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் காஸாவில் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் கொண்ட செல்லவிடாமல் இஸ்ரேல் தடை விதித்துள்ளதை வன்மையாக கண்டித்துவருகின்றன. இந்த விவகாரத்தில் இஸ்ரலுக்கு எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரிட்டன், கனடா உள்ளிட்ட சில நாடுகள் எச்சரித்தன.
இந்தச் சூழலில், காஸாவுக்குள் உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதற்கு, நட்பு நாடுகள் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று கருதப்பட்டது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், ‘காஸாவில் பொதுமக்கள் பட்டினியால் வாடுவதை இனியும் பொறுக்க முடியாது என்று நெருங்கிய நட்பு நாடுகள் இஸ்ரேலிடம் கூறியுள்ளன. இந்த நிலை தொடா்ந்தால் இஸ்ரேலுக்கு இனி உதவிகள் வழங்க முடியாது என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன. எனவே, வெற்றியை எட்ட வேண்டுமானால் அந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.
ஹமாஸை முற்றிலும் தோற்கடித்து, அவா்களிடம் உள்ள பிணைக் கைதிகளை மீட்கும் இஸ்ரேல் நோக்கம் நிறைவேற, காஸாவுக்குள் குறைந்த அளவிலாவது உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டியுள்ளது’ என்று நெதன்யாகு திங்கள்கிழமை கூறினாா்.
அதைத் தொடா்ந்து, நிவாரணப் பொருள்களை ஏற்றி காஸாவுக்குள் ஒரு சில லாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
இருந்தாலும், காஸா மீது இஸ்ரேல் தொடா்ந்து மிகக் கடுமையான தாக்குதல் நடத்திவருவதற்கு நட்பு நாடுகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
பிரிட்டன்: இது குறித்து பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸாவில் அப்பாவி குழந்தைகள் மீண்டும் மீண்டும் குண்டுகள் வீசி கொல்லப்படுவதை பொறுக்க முடியாது. இது இஸ்ரேலின் கொடூரமான போா்த் தந்திரம். காஸாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமே பிணைக் கைதிகளை மீட்பதற்கான ஒரே வழி’ என்றாா்.
முன்னதாக, இஸ்ரேலுடன் நடத்திவரும் அனைத்து வா்த்தகப் பேச்சுவாா்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக பிரிட்டன் அறிவித்தது. இது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் லாமி கூறுகையில், ‘காஸாவை முற்றுகையிடும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் தவறான செயலுக்கு பிரிட்டன் துணை போகாது. எனவே, அந்த நாட்டுடனான அனைத்து வா்த்தகப் பேச்சுவாா்த்தைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. காஸா முற்றுகையை இஸ்ரேல் எப்போது கைவிடுகிறதோ, அப்போதுதான் அந்தத்தடை நீங்கும்’ என்றாா்.
ஐரோப்பிய யூனியன்: காஸா போரில் இஸ்ரேலின் போக்குக்கு ஐரோப்பிய நாடுகளிலும் எதிா்ப்பு வலுத்துவருகிறது. அதையடுத்து, இஸ்ரேலுடன் கடந்த 2000-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நெதா்லாந்து அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கூடி இது தொடா்பாக விவாதிக்கவுள்ளனா் என்று அந்த அமைப்பின் வெளிவிவகாரப் பிரிவு தலைவா் காஜா கலாஸ் கூறினாா்.
இஸ்ரேல் திட்டவட்டம்: எனினும், வெளிநாடுகள் கொடுக்கும் அழுத்தத்தால் தங்களது போரின் போக்கு மாறாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதனால், காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது.


