`ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை... இதுதான் ஸ்டாலினின் கை!' - கேள்விகளை எழுப்பி...
UPSC Exam: ஒரே வீட்டில் ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள்.. சென்னையில் அக்கா, தங்கை சாதனை!
கவிஞர்கள் மு.முருகேஷ் - அ.வெண்ணிலா தம்பதியினரின் இரு மகள்கள் ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் ஆக தேர்வாகி உள்ளனர்.
திருவண்ணாமலை, வந்தவாசியைச் சேர்ந்த மு.முருகேஷ் - அ.வெண்ணிலா தம்பதியினர் சென்னையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்தவர் மு.வெ.கவின்மொழி. அடுத்தது இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி.
இவர்கள் மூவருமே 11, 12-ஆம் வகுப்பு வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில் படித்து, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
இளங்கலையில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த இவர்கள் யு.பி.எஸ்.சி தேர்வுக்காக சென்னையில் உள்ள தனியார் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்திலும் இணைந்து பயிற்சியைத் தொடர்ந்தனர்.

இதற்கிடையில், மு.வெ.கவின்மொழி, டி.என்.பி.எஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, குன்றத்தூர் ஆணையராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கவின்மொழி, நிலாபாரதி இருவரும் 2024-ஆம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்று, நேர்காணலுக்குச் சென்றிருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி வெளியானது. இதில் கவின்மொழி, அகில இந்திய அளவில் 546- ஆவது ரேங்கில் தேர்வாகி, ஐபிஎஸ் அதிகாரிக்கான பயிற்சியினைப் பெற உள்ளார்.
நேற்று, யு.பி.எஸ்.சி வனப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், நிலாபாரதி, அகில இந்திய அளவில் 24-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரியாகவும், தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரியாகத் தேர்வானதைப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
வாழ்த்துகள் அக்கா, தங்கை!