மும்பை : `தாதாசாஹேப் பால்கே' பெயரில் விருது : பாலிவுட் பிரபலங்களிடம் கோடிக்கணக்க...
காஸா விவகாரத்தில் டிரம்பின் முடிவு ஆபத்தானது! காங்கிரஸ்
காஸா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவு விசித்திரமானதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான அரசு தனது நிலைபாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க : சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருடன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப், காஸாவை அமெரிக்க ராணுவத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுள்ளதாக அறிவித்தார்.
மேலும், போா்க்களத்திலிருந்து வெடிக்காத ஆபத்தான குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களையும், இடிந்த கட்டடங்களையும் அகற்றி, அப்பகுதியின் மறுகட்டமைப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்பகுதி மக்கள் அனைவருக்கும் குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும் ஒரு பொருளாதார வளா்ச்சி உருவாக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த முடிவை, அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்பட பெரும்பாலான உலக நாடுகள், இரு தேசத் தீா்வுக்கு எதிரானது என்று நிராகரித்துள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“காஸாவின் எதிர்காலம் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துகள் விசித்திரமானதாகவும் ஆபத்தானதாகவும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் உள்ளன.
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட ஒரே தீர்வு, இஸ்ரேலுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்ற பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பத்தை பூர்த்தி செய்வது மட்டுமே.
டிரம்பின் கருத்துக்கு மற்ற நாடுகள் தங்களின் நிலைபாட்டை தெரிவித்துள்ளன, மோடி அரசும் தெளிவான நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.