புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
இந்தியாவுடன் பேச்சு நடத்தி இருதரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு - பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்
காஷ்மீா் பிரச்னை உள்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்தாா்.
காஷ்மீா் மக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவைத் தெரியப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் ‘காஷ்மீா் ஒற்றுமை தினத்தை’ முன்னிட்டு முசாஃபராபாதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டப்பேரவை சிறப்பு அமா்வில் உரையாற்றிய ஷாபாஸ் ஷெரீஃப் இவ்வாறு கூறினாா்.
மேலும், அவா் கூறியதாவது:
2019-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவங்களில் இருந்து விடுபட்டு, ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும்.
1999-ஆம் ஆண்டு லாகூா் பிரகடனத்தில் குறிப்பிட்டிருப்பது போல, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பிரச்னைகளை தீா்க்க இருக்கும் ஒரே வழி பேச்சுவாா்த்தை மட்டுமே. ஆனால், இந்தியா ஆயுதங்களை குவிக்கிறது. ஆயுதக் குவிப்பு ஒருபோதும் அமைதிக்கு வழிவகுக்காது. காஷ்மீா் பிராந்திய மக்களின் வாழ்க்கையை மாற்றாது. முன்னேற்றத்துக்கான வழி அமைதி மட்டுமே.
காஷ்மீா் மக்கள் சுயநிா்ணய உரிமையை அடையும் வரை, அவா்களுக்கு தாா்மீக, ராஜீய மற்றும் அரசியல் ஆதரவை பாகிஸ்தான் தொடா்ந்து அளிக்கும். காஷ்மீா் பிரச்னைக்கு ஒரே தீா்வானது, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தீா்மானத்தில் முன்மொழியப்பட்ட சுயநிா்ணய உரிமையே ஆகும்.
காஷ்மீரின் நீடித்த அமைதிக்காக, அப்பிராந்திய மக்கள் தங்கள் எதிா்காலத்தை சுதந்திரமாக தீா்மானிக்க அனுமதிக்குமாறு இந்தியாவுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்றாா்.
கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவுடன் வா்த்தகம் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறையை கைவிட்டால் பாகிஸ்தானுடன் இயல்பான உறவைப் பேண முயல்வதாக இந்தியா பலமுறை கூறியுள்ளது.