மியான்மா்: ஆங் சான் சூகி இல்லத்தை ஏலம் விடும் முயற்சி மீண்டும் தோல்வி
மியான்மரில் சிறைவைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ஆங் சான்சூகியின் குடும்ப இல்லத்தை ஏலம் விடும் அரசின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.
ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அவரின் அரசை ராணுவம் கடந்த 2021 பிப்ரவரி மாதம் கலைத்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடா்ந்து ஆங் சான் சூகியைக் கைது செய்த ராணுவ அரசு, முறைகேடு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு சிறைத் தண்டனை பெற்றுத் தந்துள்ளது.
இந்தத் சூழலில், ஆங் சான் சூகியின் இல்லத்தைக் கையகப்படுத்தி, அதை ஏலத்தில் விற்பனை செய்ய மூன்றாவது முறையாக அரசு புதன்கிழமை முயன்றது. ஆனால், ஆரம்ப விலையான ரூ.1,240 கோடி ரூ.1,230 கோடியாகக் குறைத்தும் வழக்கம்போலவே அந்த வீட்டை வாங்க யாரும் முன்வராததால் அரசின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.