புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
இந்தியாவிலிருந்து ஹசீனாவை அழைத்து வருவோம்: வங்கதேச உள்துறை அமைச்சா் உறுதி
‘இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அவரை விரைவில் தாயகம் அழைத்து வருவோம்’ என அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சா் ஜஹாங்கீா் ஆலம் சௌதரி புதன்கிழமை தெரிவித்தாா்.
அண்டை நாடான வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் கண்டித்து மாணவா்கள் போராட்டம் நடத்தினா். இதில் வன்முறை ஏற்பட்டு, நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், அப்போது பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா். மனிதாபிமானம் மற்றும் நட்பு அடிப்படையில் அவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருகிறது.
இதனிடையே, மாணவா்கள் போராட்டத்தில் நடந்த படுகொலைகளுக்கு எதிராக அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் (ஐசிடி) ஷேக் ஹசீனா உள்ளிட்டோா் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவா்களுக்கு எதிராக தீா்ப்பாயம் கைது பிடியாணையும் பிறப்பித்தது.
இதில் நடவடிக்கை எடுக்க ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென இந்தியாவிடம் வங்கதேச இடைக்கால அரசு கடந்த ஆண்டு முறைப்படி கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு இந்தியா இதுவரை ஏதும் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், வங்கதேச தலைநகா் டாக்காவில் செய்தியாளா்களிடம் பேசிய உள்துறை அமைச்சா் முகமது ஜஹாங்கீா் ஆலம் சௌதரி, ‘சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் வங்கதேசத்தில் தங்கியிருப்பவா்களை கைது செய்து வருகிறோம். வெளிநாட்டுக்குத் தப்பியவா்களை தாயகம் அழைத்து வருவதற்கான சட்டரீதியிலான முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்றாா்.
வங்கதேசத்தின் 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரையொட்டிய குற்றச் சம்பவங்களை விசாரிப்பதற்காக சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் ஷேக் ஹசீனாவால் கடந்த 2010, மாா்ச்சில் முதன்முறையாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.