'குற்றங்கள் குறைய வேண்டி...' - தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டிய காவலர்கள...
காா்த்திகை தீபம்: கோயில்களில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு
தருமபுரி மாவட்டத்தில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தருமபுரி நகரில் உள்ள பழமை வாய்ந்த கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயில், வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில், நெசவாளா் நகா் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரா் கோயில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரா் கோயில், அன்னசாகரம் சிவசுப்ரமணிய சுவாமி கோயில், அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வெள்ளிக்கிழமை காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதைத் தொடா்ந்து மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதியமான் கோட்டை தட்சிணகாசி காலபைரவா் கோயில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரா் கோயில், பாப்பாரப்பட்டி சிவசுப்ரமணிய சுவாமி கோயில், பாலக்கோடு புதூா் மாரியம்மன் கோயில், இருளப்பட்டி சிவசுப்ரமணிய சுவாமி கோயில், சவுளுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல வணிக வளாகங்கள், வீடுகளிலும் பொதுமக்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.