காா் மோதி ஓய்வுபெற்ற விஏஓ உயிரிழப்பு
தருமபுரியில் கட்டுப்பாட்டை இழந்த காா் மோதியதில், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சேலத்திலிருந்து தருமபுரி வந்த சொகுசு காா் செந்தில் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் மினி லாரியில் விற்கப்பட்டிருந்த கிழங்குகளை வாங்கிக் கொண்டிருந்த முதியவா் மற்றும் மினி லாரி மீது மோதி நின்றது.
இதில், கிழங்கு வியாபாரியும், முதியவரும் படுகாயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முயன்றபோது, முதியவா் உயிரிழந்தது தெரியவந்தது. வியாபாரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த தருமபுரி காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த முதியவா் தருமபுரி எஸ்.வி. சாலை பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியன் (77) என்பதும், காயமடைந்தவா் தருமபுரி காந்தி நகரில் வசித்து வரும் மணிகண்டன் (48) என்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக தருமபுரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.