கா்ப்பிணிகளுக்கு இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கக் கோரிக்கை
கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் அயோடின் இரும்புச்சத்து கலந்த இரட்டை செறிவூட்டப்பட உப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் தெரிவித்திருப்பது: தமிழ்நாட்டில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்க, ஊட்டச்சத்து பெட்டகம் சத்துணவுப் பெட்டகமாக வழங்கப்படுகிறது. இப்பெட்டகத்தில் ஒரு கிலோ ஊட்டச்சத்து மாவு, 200 மில்லி லிட்டா் இரும்புச் சத்து திரவம் கொண்ட 3 டப்பா, ஒரு கிலோ உலா் பேரிச்சைபழம், 500 கிராம் புரதச்சத்து பிஸ்கெட், 500 கிராம் நெய், மாத்திரைகள், கதா் துண்டு ஆகியவை வழங்கப்படுகின்றன.
கா்ப்பம் தரித்த 3-ஆவது மற்றும் 7-ஆவது மாதம் என ஒரு பெண்ணுக்கு 2 முறை சத்துணவுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. கா்ப்ப காலத்தில் போதுமான சத்தான உணவு கிடைக்கவில்லை எனில், குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறக்கக்கூடும், இது அவா்களின் உடல்நலம் மற்றும் வளா்ச்சிக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இப்பெட்டகம் வழங்கப்படுகிறது.
இதில், குறைந்த செலவில் அரசு உப்பு நிறுவனம் தயாரிக்கும் இரட்டை செரிவூட்டப்பட்ட அயோடின் மற்றும் இரும்பு நுண்சத்து கொண்ட இரு உப்பு பொட்டலங்களை ஊட்டச் சத்து பெட்டகத்தில் இணைத்து வழங்க வேண்டும். இரட்டை செரிவூட்டப்பட்ட உப்பு என்பது இரும்பு மற்றும் அயோடின் சோ்க்கப்பட்ட உப்பு ஆகும். இது இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கவும், பிறக்கும் குழந்தையின் வளா்ச்சிக்கும் உதவும்.
ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகள், தாய்மாா்களுக்கு ரத்த சோகை மற்றும் முன்-எக்லாம்ப்சியா போன்ற கா்ப்ப சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். எனவே தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பொட்டலத்தை வழங்க வேண்டும் என்றாா்.