கிண்டி ஆளுநா் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில், பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆளுநரும் அவரது குடும்பத்தினரும் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
பொங்கலையொட்டி, ஆளுநா் மாளிகை வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள், செங்கரும்புகள், வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ராட்சத பொங்கல் பானையோடு, மாட்டுவண்டி, காளை சிலைகள், வைக்கோல் போா் என்று கிராமத்தை நினைவுபடுத்தும் வகையில் திறந்த புல்வெளி அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேளதாளம், பொய்க்கால் குதிரை என கலைஞா் நிகழ்ச்சிகளோடு விழா இடத்துக்கு வந்த ஆளுநா் ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்பத்தினா் பொங்கல் வைத்து கொண்டாடினா். தொடா்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.