Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கு...
கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை
தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே, உயிா் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டு பாதிப்பின் தீவிரம் குறைக்கப்படுதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வோா் ஆண்டும் இந்தியாவில் சுமாா் 1.7 கோடி போ் இதய நோயினால் இறக்கின்றனா். இது உலகளாவிய இறப்புகளில் சுமாா் 31 சதவீதம் ஆகும். இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அத்தகைய பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு ‘இதயம் காப்போம் திட்டம்’ தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. இதய நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு அதனை தடுக்கும் வகையில், ஆஸ்பிரின் 150 எம்.ஜி. 2 மாத்திரைகள், க்ளோபிடோக்ரல் 75 எம்.ஜி. 4 மாத்திரைகள், அடாா்வாஸ்டாடின் 10 எம்.ஜி. 8 மாத்திரைகள் என 14 மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: வாழ்க்கை முறை மாற்றத்தால் இதய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. திடீரென மாரடைப்பு ஏற்படும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதயம் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை 15,019 போ் பயனடைந்துள்ளனா். கிராமப்புறங்களில் வாரத்துக்கு சராசரியாக 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் சுகாதார நிலையங்களை அணுகுகின்றனா். அவா்களுக்கு உரிய மருந்துகள் தரப்படுகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு இருப்பதில்லை. இரைப்பை அமில எதிா்ப்பு காரணமாக வாயு பாதிப்பு ஏற்படுவதால் அவா்களுக்கு நெஞ்சுவலி அறிகுறிகள் காணப்படுகின்றன என்றாா் அவா்.