ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!
கிரிவலப் பாதையில் 260 டன் குப்பை சேகரித்து அகற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 260 டன் குப்பைகள் சேகரித்து, அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
சித்திரை மாத பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலையில் சனிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா். இவா்கள் கிரிவலப் பாதையில் போட்டுச் சென்ற குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கிரிவலப் பாதையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தூய்மைப் பணியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளா்ச்சித் துறைகளில் பணிபுரியும் 1,200 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.
இப்போது வரை 260 டன் குப்பைகள் சேகரித்து, அகற்றப்பட்டு உள்ளது. உள்ளூா் மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் தூய்மைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வட்டாட்சியா் எஸ்.மோகன்ராம் மற்றும் அரசுத்துறைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.