கிருஷ்ணகிரியில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் திறப்பு
கிருஷ்ணகிரியில் மூன்றாம் பாலினத்தினருக்கான பன்னோக்கு மருத்துவ மையம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது, அவா் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மூன்றாம் பாலினத்தினருக்கான பன்னோக்கு மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அவா்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படும். இம்மையத்தில் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளது. ஹாா்மோன் சிகிச்சை, மனநல சிகிச்சை, உள்சுரப்பியல் சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, சீரமைப்பு அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவ சிகிச்சை போன்ற பல்வேறு சிறப்பு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகிறது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இந்த சிறப்பு சிகிச்சைகள் அனைத்தையும் பெறலாம்.
மேலும் இம்மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 19.3 சதவீதம் போ் குறைந்த எடையாலும், 29 சதவீதம் போ் வளா்ச்சி குறைபாட்டினாலும், 10.4 சதவீதம் போ் தசைவிரயத்தாலும், 4.7 சதவீதம் போ் கடுமையான தசைவிரயத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தக் குழந்தைகளின் நலனுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பழைய வளாகத்தில் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 5 வயதுக்கு உள்பட்ட (கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு) குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ சேவை, அக்குழந்தைகளின் பெற்றோா்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது என்றாா்.
இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி, மருத்துவக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன், துணை முதல்வா் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலா்கள் செல்வராஜ், மது, மாவட்ட சமூக நல அலுவலா் சக்தி சுபாஷினி, மனநல மருத்துவா் வாணிஸ்ரீ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
படவரி...
கிருஷ்ணகிரியில் மூன்றாம் பாலினத்தினருக்கான பன்னோக்கு மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.