Vanangaan Public Review | FDFS | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.67 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்க விழா பா்கூா் வட்டம், கந்திகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடை அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பங்கேற்று குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள், இலவச வேட்டி, சேலைகளை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 1,058 நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகத்தின் கீழ் 36 நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,094 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
இவற்றில் அரிசி பெற தகுதியுள்ள 5,61,376 குடும்ப அட்டைதாரா்கள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 332 போ் என மொத்தம் 5,67,710 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 6.41 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகின்றன. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜன. 13-ஆம் தேதி வரை வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் தங்களது நியாயவிலைக் கடைக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பொது மேலாளா் சக்தி சாரள், கூட்டுறவுச் சங்க துணை பதிவாளா்கள் (பொது விநியோகத் திட்டம்) குமாா், பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, வட்டாட்சியா் பொன்னாலா, வட்ட வழங்கல் அலுவலா் பத்மா, சாா் பதிவாளா்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.