குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!
குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில்,
இந்த நிலையில், பாலம் இடிந்து விழுந்ததில் மேலும் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பால விபத்தில் மேலும் மூவர் காணவில்லை.
சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்டிஆர்ஃஎப்) குழுக்கள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் 4 கிலோ மீட்டர் வரை மாயமானவர்களின் உடல்களைத் தேடி வருகின்றது.
பட்டியலின்படி, இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான மூவரைத் தேடி வருகின்றனர். காணாமல் போன மற்ற நபர்கள் குறித்து கட்டுப்பாட்டு அறையை அழைத்துத் தெரிவிக்கலாம் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மழை மற்றும் ஆற்றில் அதிகப்படியான சேறு இருப்பதால் மீட்புப் பணி சவாலான பணியாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் எந்த இயந்திரமும் வேலை செய்யவில்லை என்று அவர் கூறினார்.
ஆற்றில் மீட்கப்பட்ட ஒன்பது பேரில் ஐந்து பேர் காயமடைந்து வதோதராவில் உள்ள எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஆனந்த் முன்னதாக தெரிவித்தார், காயமடைந்தவர்களில் யாரின் நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை என்று அவர் கூறினார்.
நடந்தது என்ன?
குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 23 உயரமான தூண்களுடன் 900 மீட்டர் நீள பாலம் அமைந்துள்ளது. 1985-ஆம் ஆண்டில் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இப்பாலம் மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதிக்கு இணைப்பை வழங்கி வந்தது. இந்தப் பாலத்தின் இரண்டு தூண்டுகளுக்கு இடைப்பட்ட 15 மீட்டர் நீளமுள்ள பகுதி புதன்கிழமை காலை 7.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது பாலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் ஆகிய வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். சிலர் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.