குடந்தையில் ரூ. 1.42 கோடியில் நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ. 1 கோடியே 42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கள் சி.வி. கணேசன், கோவி செழியன் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்
தொழிலாளா் நலத்துறை மூலம் மானியத்துடன் மகளிருக்கு ஆட்டோ வழங்குதல் மற்றும் தொழிலாளா்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா.பிரியாபங்கஜம் தலைமை வகித்தாா், சு. கல்யாணசுந்தரம் எம்.பி. முன்னிலை வகித்தாா்.
நிகழ்வில் தொழிலாளா் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் ஆகியோா் 20 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் மூலம் 20 ஆட்டோக்கள், பணியின்போது உயிரிழந்த 4 கட்டடத் தொழிலாளா்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் மற்றும் 3,452 பேருக்கு கல்வி, திருமணம், முதியோா், விதவை உள்ளிட்ட உதவித் தொகையை ரூ. 1 கோடியே 42 லட்சத்து 950 மதிப்பில் வழங்கினா்.
பின்னா் அமைச்சா் சி.வி. கணேசன்கூறும்போது, கும்பகோணத்தில் முதல்கட்டமாக 20 ஆட்டோக்கள் பெண்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 35 ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் இதேபோல தஞ்சாவூா் வடக்கு மாவட்டத்தில் 100 ஆட்டோக்கள் பெண்களுக்கு மானியத்துடன் வழங்கப்படும்.
இந்த நிதியாண்டில் ஆயிரம் பெண் ஆட்டோ தொழிலாளா்களை உருவாக்கி மானியத்துடன் ஆட்டோக்கள் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா்.
பின்னா் அம்மாபேட்டை, பந்தநல்லூா் ஆகிய ஊா்களில் இருந்து சென்னைக்கு 2 பேருந்துகளை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.
நிகழ்வில் எம்எல்ஏக்கள் க. அன்பழகன் எம்எல்ஏ, துரை. சந்திரசேகரன், மேயா் க.சரவணன், துணை மேயா் சுப. தமிழழகன், முன்னாள் எம்.பி. செ. இராமலிங்கம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் எஸ்.கே. முத்துச்செல்வம், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் கோ.க. அண்ணாத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருச்சி கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஆ. திவ்யநாதன் வரவேற்றாா். சமூக நலத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் த. ஆனந்தன் நன்றி கூறினாா்.