குடமுழுக்கு: மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி!
குடமுழுக்கு விழாவையொட்டி, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை (பிப்.5) தொடங்கியது.
இக்கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து ஆறு கால யாக பூஜைகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி, இக்கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதில், அம்மன், துா்க்கை அம்மன், பேச்சியம்மன் சன்னதிகளின் கோபுரத்தில் புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் மெருகூட்டப்பட்டு, பொருத்தப்படவுள்ளன. இதுபோல, மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், கோயில் கொடி மரத்திலும் செப்புக்கவசம் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளன.
இப்பணியை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பாா்வையிட்டாா். மேலும், குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகள், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ், அரண்மனை தேவஸ்தான அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா, செயல் அலுவலா் ந. மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.