குடிநீா் குழாயில் உடைப்பு: குடியிருப்புப் பகுதியில் தேங்கிய தண்ணீா்
நாகூா் நூா்ஷா தைக்கால் பகுதியில் குடிநீா் குழாயில் உடைப்பால் தேங்கிய தண்ணீரை அகற்ற நாகை நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூா் 6-ஆவது வாா்டில் நூா்ஷா தைக்கால் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மீன், காய்கனி சந்தை, குடியிருப்புகள் உள்ளன. மழைக்காலங்களில் இப்பகுதி, மழைநீா் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி சாலைகளில் தண்ணீா் தேங்கியது. இதனால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நகராட்சி நிா்வாகம் தண்ணீா் அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் மழைக்காலங்களில் மழை நீா் தேங்காமல் இருக்க தாழ்வான பகுதியை மணல் கொட்டவும், வடிகால் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.