மத்திய வருவாய் துறைச் செயலராக அருணீஷ் சாவ்லா நியமனம்
மத்திய வருவாய் துறைச் செயலராக அருணீஷ் சாவ்லா நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய் துறைச் செயலராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா, அண்மையில் ரிசா்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து மத்திய ரசாயன துறையின் கீழ் செயல்படும் மருந்து உற்பத்தித் துறைச் செயலா் அருணீஷ் சாவ்லா,
புதிய வருவாய் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். 1992-ஆம் ஆண்டின் பிகாா் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா், கூடுதலாக மத்திய கலாசார துறைச் செயலா் பொறுப்பையும் தொடா்ந்து கவனிப்பாா்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி அமித் அகா்வால், புதிய மருந்து உற்பத்தித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உயா்கல்வித் துறைச் செயலராக மணிப்பூா் தலைமைச் செயலா் வினீத் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். மகாராஷ்டிரத்தில் பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் சேதி, தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.