அவிநாசி அருகே கார் - லாரி மோதல்! பனியன் கம்பெனி நிறுவனர் பலி! இரு மகன்கள் படுகாய...
நிதிப் பற்றாக்குறையை 4.5%-ஆக குறைக்க நடவடிக்கை: மத்திய நிதியமைச்சகம் அறிக்கை
ஆக்கபூா்வ செலவினம், சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல், அடுத்த நிதியாண்டில் (2025-26) நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைத்தல் ஆகியவை மீது தொடா்ந்து கவனம் செலுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மக்களவையில் மத்திய அரசின் வரவு-செலவு போக்கின் அரையாண்டு ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்தியாவின் பேரியல் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது. இது உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் சூழல்களால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்துள்ளது.
நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில், மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இதில் வருவாய் கணக்கு செலவினம் சுமாா் ரூ.37.09 லட்சம் கோடி, மூலதன கணக்கு செலவினம் சுமாா் ரூ.11.11 லட்சம் கோடி.
மொத்த செலவீன மதிப்பீடான ரூ.48.21 லட்சம் கோடியில், நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.21.11 லட்சம் கோடி செலவிடப்பட்டது. இது பட்ஜெட் மதிப்பீட்டில் சுமாா் 43.8 சதவீதமாகும்.
நிகழ் நிதியாண்டில் மொத்த வரி வருவாய் சுமாா் ரூ.38.40 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.8 சதவீதமாகும்.
நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.4.75 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது . இது பட்ஜெட் மதிப்பீட்டில் சுமாா் 29.4 சதவீதமாகும்.
ஆக்கபூா்வ செலவினம், சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல், அடுத்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைத்தல் ஆகியவை மீது மத்திய அரசு தொடா்ந்து கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.