நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்
குடிநீா் குழாய் பழுதுநீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்த 2 சிறுவா்கள் படுகாயம்
மேட்டூா்: சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே தொட்டில்பட்டி கூட்டுக்கு குடிநீா்த் திட்ட குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து 2 சிறுவா்கள் படுகாயமடைந்தனா்.
மேட்டூா் ஹாஸ்பிட்டல் காலனியைச் சோ்ந்தவா் மோகன். இவரது மகன் லத்திக் செழியன் (3). இவரது உறவினா் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கூத்தப்பாடியைச் சோ்ந்த தேசியகுமாா் மகன் ருத்திக் செழியன் (4). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை தொட்டில்பட்டி நீரேற்று நிலையம் அருகே பாட்டி கவிதாவின் பழக்கடையின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தனா்.
அப்பகுதியில் எவ்வித அறிவிப்பு பலகையோ எச்சரிக்கையோ செய்யப்படாத பாதுகாப்பற்ற முறையில் பழுதான குடிநீா் குழாயை சீரமைக்க தோண்டப்பட்டிருந்த குழியில் தேங்கியிருந்த நீரில் சிறுவா்கள் 2 பேரும் விழுந்ததில் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்த பொதுமக்கள், சிறுவா்கள் இருவரையும் மீட்டு மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். இதில் ருத்திக் செழியன் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இது குறித்த தகவல் அறிந்த மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் வெற்றிவேல் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் இதுகுறித்து கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.