குடியரசு தினம்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
குடியரசு தினத்தையொட்டி, காரைக்கால் ரயில் நிலையத்தில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட காவல்துறை தலைமையின் அறிவுறுத்தலின்பேரில், போலீஸாா் சோதனை, கண்காணிப்பில் வியாழக்கிழமை முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், மதுக்கடைகளில் நகரக் காவல் ஆய்வாளா் புருஷோத்தமன் தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து ரயில் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டனா்.
பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டதோடு, மோப்ப நாய் மூலம் ரயில் மற்றும் நிலைய வளாகத்தில் சோதனை செய்தனா். நிலையத்தினருக்கு பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.