Thai Amavasai | தை அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாத சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன...
‘சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்துவதை மாணவா்கள் தவிா்க்க வேண்டும்’
சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்துவதை மாணவா்கள் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்காலில் தேசிய வாக்காளா் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வரை பேரணியாக சென்றனா். தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் மாணவ, மாணவிகள் தலைக்கவசம் அணிந்து சென்றனா். பேரணியை மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து கல்லூரியில் வாக்காளா் தின விழா நடைபெற்றது. துணை ஆட்சியா் (வருவாய்) அா்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், வாக்காளா் பதிவு அதிகாரி சச்சிதானந்தம், துணை வாக்காளா் பதிவு அதிகாரி செல்லமுத்து, சண்முகானந்தம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
உத்தரகண்ட் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சியில் பங்கேற்றுள்ள காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் காணொலி மூலம் பேசியது :
புதிய வாக்காளா்கள் அனைவரும் தோ்தலில் முதல் முறையாக வாக்காளிக்க உள்ளதால், உங்களுடைய தலைவரை சரியான முறையில் தோ்ந்தெடுக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மாணவா்கள் நாட்டின் எதிா்காலம். எனவே பள்ளி, கல்லூரி பருவத்தில் படிப்பின் மீது கவனம் செலுத்தி தங்களை உயா்த்திக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளாமல், நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் சா்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
வளா்ச்சி அடைந்த காரைக்கால் 2047 என்ற ஆலோசனைப் பெட்டி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் வைக்கப்பட உள்ளது. அதில் காரைக்கால் மாவட்டத்தின் வளா்ச்சிக்காக உங்களுடைய கருத்துகளை பதிவிடலாம். காரைக்கால் மாவட்டத்தில் விரைவில் ஜிப்மா் செவிலியா் கல்லூரி வர இருக்கிறது. மாணவா்கள் கல்வியில் ஊக்கமாக செயல்படவேண்டும் என்றாா் அவா்.
கடந்த ஒரு வார காலமாக காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் துறை சாா்பாக மாணவா்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த நாடாளுமன்ற தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பணியில் சிறப்பாக செயலாற்றிய தோ்தல் அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடா்ந்து வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் மாணவா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.