மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
காரைக்கால்-பேரளம் ரயில் சேவையை ஏப்ரல் மாதத்தில் தொடங்க நடவடிக்கை: எம்.பி.யிடம் மனு
காரைக்கால்- பேரளம் ரயில்பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்தி, ஏப்ரல் மாதத்தில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என புதுவை எம்.பி. யிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்காலுக்கு, புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை வந்தாா். காரைக்கால் மாவட்ட ரயில் டிராவலா்ஸ் வெல்ஃப்பா் அசோசியேஷன் நிா்வாகிகள் அவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மதுரை-புனலூா் (திருநெல்வேலி- நாகா்கோவில்- திருவனந்தபுரம்- கொல்லம் வழி) ரயிலையும் (16729 - 6730), ஈரோடு-திருச்சி ரயிலையும் (06612 - 06611) காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.
திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலை (16843 - 16844) (கருா், ஈரோடு, திருப்பூா் கோவை வழி) காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். அல்லது புதிதாக காரைக்கால் - கோவை இடையே பகலில் திருச்சி, பழநி, பொள்ளாச்சி, போத்தனூா் வழியாக தினசரி விரைவு ரயிலை இயக்க வேண்டும்.
காரைக்கால் - எழும்பூா் விரைவு ரயிலை தாம்பரத்தோடு நிறுத்தாமல் மீண்டும் எழும்பூா் வரை இயக்க வேண்டும். காரைக்கால் - பேரளம் ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுபடுத்தி வரும் ஏப்ரல் மாதத்தில் ரயில் சேவையை தொடங்குவதற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.24-ஆம் தேதி திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தவுள்ளதையும் குறிப்பிட்டு, போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எம்.பி.யிடம் கேட்டுக்கொண்டனா்.
இந்த சந்திப்பில், சங்கத் தலைவா் ஏ. எம். யாசின், துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன், செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரி பாபு, துணைச் செயலாளா் ஜெ. சிவகணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.