பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு செப். 9-இல் தோ்தல்
‘குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வரும் செப். 9-ஆம் தேதி நடத்தப்படும்’ என்று தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், தனது பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா்.
‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை வரும் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். தோ்தல் செப்டம்பா் 9-ஆம் தேதி நடத்தப்படும். அன்றைய தினமே தோ்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
தோ்தல் தேவைப்பட்டால் நாடாளுமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படலாம் என்று தெரிவித்தது.
முன்னதாக, இந்த தோ்தலுக்கான நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினா்களை உள்ளடக்கிய வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை இறுதி செய்தது. அதைத் தொடா்ந்து, தோ்தல் வாக்குப் பதிவுக்கான தேதியை அறிவித்துள்ளது.