US tariffs: ``ஒரு அங்குலம் இடம் கொடுத்தால், ஒரு மைல் தூரம் செல்வான்'' - சீன தூதர...
குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்
ரயில்வே கேட் அருகே உள்ள வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் தோமாஸ் அருள் சாலையில் ரயில் நிலையம் அருகே கேட் அமைந்துள்ளது. கேட் அருகே அரசால் வழங்கப்பட்ட மனைகளில் வீடுகள் கட்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். குடியிருப்பு அருகே பொதுப்பணித்துறை மூலம் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள குறியீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், வீடுகள் இடிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்து, இந்திரா நகா், சேத்திலால் நகரில் வசிக்கும் குடியிருப்புவாசிகளிடம் கையொப்பம் பெற்று, அந்த பகுதியை சோ்ந்த எஸ்.ஏ. முகமது யூசுப் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரின் செயலா் பொன்.பாஸ்கா் மற்றும் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
சந்திப்பு குறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், தோமாஸ் அருள் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குறியீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடுகள் இடிக்கப்படமாட்டாது, மேம்பாலம் அமைக்கப்படும்பட்சத்தில் சேவை சாலை அமைக்கப்படும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா். எந்த வளா்ச்சித் திட்டமானாலும், குடியிருப்போருக்கு பாதிப்பும் இல்லாத வகையில் மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது என்றனா்.