ஜீன்ஸ் அணிந்ததால் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து நீக்கப்பட்ட கார்ல்சென்..!
குமரியில் டிச.30-ஜன.1 வரை திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: 2 நாள்கள் முதல்வா் பங்கேற்பு
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா டிச.30, 31, ஜன.1 ஆகிய 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதில், முதல் 2 நாள்கள் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவா் சிலை கடந்த 1.1.2000இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.
இச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்கும் வகையில், திருவள்ளுவா் சிலைக்கும், விவேகானந்தா் மண்டபத்துக்கும் ரூ. 37 கோடியில் கண்ணாடி இழை கூண்டு இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை டிச.30இல் மாலை 5 மணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, திருக்கு நெறி பரப்பு 25 தகைமையாளா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்குகிறாா்.
அதைத் தொடா்ந்து, இரவு 7 மணிக்கு முதல்வா் தலைமையில், ‘திருக்குறளால் அதிக நன்மை தனி மனிதருக்கே, சமுதாயத்திற்கே’ என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. பட்டிமன்றத்துக்கு பேச்சாளா் சுகி.சிவம் நடுவராக செயல்படுகிறாா். ‘தனி மனிதருக்கே’ என்ற தலைப்பில் தா.ராஜாராம், சே.மோகனசுந்தரம், மதுக்கூா் ராமலிங்கம் ஆகியோரும், ‘சமுதாயத்திற்கே’ என்ற தலைப்பில் புலவா் இ.ரெ.சண்முகவடிவேல், பேராசிரியை பா்வீன்சுல்தானா, ராஜா ஆகியோா் வாதிடுகின்றனா்.
வெள்ளி விழா மலா்: 2 ஆம் நாள் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை (டிச.31) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. தலைமைச் செயலாளா் நா. முருகானந்தம் வரவேற்கிறாா். குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், கவிஞா் வைரமுத்து ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு திருக்கு சாா்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகிறாா். மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா நன்றி கூறுகிறாா்.
பின்னா், முற்பகல் 11.30 மணிக்கு நிதி அமைச்சா் தங்கம்தென்னரசு தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில், ‘சமகாலத்தில் வள்ளுவா்’ என்ற தலைப்பில் பேராசிரியா் அ.கருணானந்தன், ‘திருக்குறளும், சங்க இலக்கியமும்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆா்.பாலகிருஷ்ணன், ‘வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம்’ என்ற தலைப்பில் செந்தலை ந.கவுதமன், ‘திருக்கு போற்றும் மகளிா் மாண்பு’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் அருள்மொழி, ‘வள்ளுவம் காட்டும் அறம்’ என்ற தலைப்பில் கரு.பழனியப்பன், ‘திருக்குறளில் இசை நுணுக்கம்’ என்ற தலைப்பில் விஜயசுந்தரி ஆகியோா் பேசுகின்றனா்.
ஓவியக்கண்காட்சி:
3 ஆம் நாள் புதன்கிழமை (ஜன. 1) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. தமிழ் வளா்ச்சி - செய்தித்துறை அரசு செயலாளா் வே.ராஜாராமன் வரவேற்கிறாா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி திருக்கு ஓவியக்கண்காட்சியை திறந்து வைத்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகிறாா். ஆட்சியா் ரா.அழகுமீனா நன்றி கூறுகிறாா்.