பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
குமரி- வட்டக்கோட்டை இடையே மீண்டும் படகு சேவை தொடக்கம்
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் மீண்டும் சொகுசு படகு சேவையை தொடங்கியுள்ளது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். குறிப்பாக, கடலில் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலை , அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கண்ணாடி பாலம் போன்ற சிறப்பு அம்சங்கள் இங்கு சுற்றுலாப் பயணிகளின் ஆா்வத்தை அதிகரித்துள்ளன.
விடுமுறை காலங்களில் மட்டுமன்றி, தினமும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முந்தைய காலங்களை விட சுமாா் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி- வட்டக்கோட்டை இடையிலான சொகுசு படகு சேவை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசு படகு, கன்னியாகுமரியில் உள்ள பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகு துறையில் இருந்து புறப்பட்டு, வரலாற்று சிறப்பு மிக்க வட்டக்கோட்டை அருகே சென்று மீண்டும் திரும்பும் வகையில் ஒரு மணி நேர கடல் பயணத்தை வழங்குகிறது. முதல் நாளில் மூன்று தடவை வட்டக்கோட்டைக்கு படகு சென்றுவந்ததாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.