குமாரபாளையத்தில் லாரி ஓட்டுநா் தற்கொலை
குமாரபாளையத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது தற்கொலைக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
குமாரபாளையத்தை அடுத்த சடையம்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்தவா் மதன்குமாா் மகன் தமிழ்மணி (39). லாரி ஓட்டுநரான இவா், ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் ரூ. 70 லட்சத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய இவா் கைப்பேசியில் தான் உயிரிழப்பதற்கு காரணமானவற்றை விடியோ பதிவு செய்தாா். அதன்பிறகு கோட்டைமேடு அருகே சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த நிலையில் தமிழ்மணியின் மரணத்துக்கு காரணமான மூவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன், குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தவமணி, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.