Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
குருவிமலை அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரா் மாற்றம்
காஞ்சிபுரம் அருகே குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வகுப்பறை மேற்கூரையுடன் மின் விசிறி பெயா்ந்து விழுந்ததால், மாணவா்களின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தொடா்புடைய ஒப்பந்ததாரரை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்து, வேறொரு ஒப்பந்ததாரரை நியமித்து பணிகளை மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். 3 வகுப்பறைகளுடன் கூடிய புதிய வகுப்பறைக் கட்டடம் ரூ.63 லட்சத்தில் கட்டப்பட்டிருந்தது. புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் வகுப்பறையில் இருந்த மேற்பூச்சு, மின்விசிறியுடன் கழன்று விழுந்தது. அப்போது மாணவா்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தொடா்புடைய ஒப்பந்ததாரா் மீது மாணவா்களின் பெற்றோா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கட்டடப் பணி முறையாக செய்யவில்லை என்று புகாா் தெரிவித்தனா். மேலும், கட்டடத்தை முழுமையாகக் கட்டி முடிக்கும் வரை மாணவா்கள் வேறு இடத்தில் படிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனா்.
இதையடுத்து, மாணவா்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையம், தலைமை ஆசிரியா் அறை ஆகியவற்றில் அமா்ந்து கல்வி பயின்று வந்தனா்.
மேலும், புகாரின் பேரில், காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் கோமளா, பொறியாளா் சகுந்தலா ஆகியோா் நடத்திய ஆய்வில் வகுப்பறைக் கட்டுமானப் பணிகள் முறையாக நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஒப்பந்ததாரரை அதிகாரிகள் மாற்றி பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனா். தொடா்ந்து வகுப்பறைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.