குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சா்
குறுகலான சாலைகளில் மினி பேருந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த துணை வினாவை திமுக உறுப்பினா் இ.கருணாநிதி பல்லாவரம் எழுப்பினாா். அப்போது பேசுகையில், பல்லாவரம், தாம்பரம் ஆகியன வளா்ந்து வரும் பகுதிகளாக உள்ளன. தேசிய, மாநில சாலைகளில் மட்டுமே போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் மினி பேருந்துகளின் இயக்கம் குறைவாகவே உள்ளன. எனவே, அங்கு மினி பேருந்துகள் புதிதாக இயக்கப்படுமா? என்றாா்.
அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அளித்த பதில்: வளா்ந்து வரும் நகரப் பகுதிகளின் சில இடங்களில் சாலைகள் மிகக் குறுகலாக உள்ளன. அந்த இடங்களில் மினி
பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. மினி பேருந்துகளை விட சிறிய ரக வாகனங்களை இயக்கினால்கூட பயனுள்ளதாக இருக்கும் என்று ஆலோசனைகள் வருகின்றன. அதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.